தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப்  பின்; தொடர்ந்து அலைக்கடிக்கப்படும் கரும்பு விவசாயிகள்!

 

sugarcane

தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பாக்கி பணம் தருவதாக தமிழக அரசு உறுதியளித்ததால் கரும்பு விவசாயிகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன் கரும்பு நிலுவைத்தொகை தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில். உடன்பாடு எட்டப்பட்டதால் கரும்பு விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அரிவித்திருந்தது. 2016-2017ஆம் ஆண்டு நிலுவைத் தொகையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.125 வீதம் தீபாவளிக்கு முன் வழங்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருந்தார்.

மேலும் தனியார் ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.110 கோடி வழங்கப்படும் என்றும் மீதி கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக தீபாவளிக்கு பிறகு முத்தரப்பு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல் கூட்டுறவு ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.12.26 கோடி தீபாவளி பண்டிகைக்கு முன் தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

010-sugar-4

தமிழக அளவில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 25 தனியார் சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 43 சர்க்கரை ஆலைகளில் அரவை பருவத்துக்காக கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கான பாக்கிப்பணம் தரப்படாமல் நிலுவையில் இருந்தது. இவற்றில் 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் கரும்பு பாக்கி பணம் தரப்பட்டிருந்தது.

மீதமுள்ள 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், 11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 25 தனியார் ஆலைகள் என மொத்தம் 38 சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசின் பரிந்துரை விலை ரூ.2,000 கோடி பாக்கி பணம் கடந்த 2 ஆண்டுகளாக தரப்படாமல் உள்ளது.

இதுகுறித்து 12ம் தேதி மாநில தொழிற்துறை அமைச்சர் சம்பத், வேளாண்மைத்துறை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையர் அனுஜார்ஜ் ஆகியோருடன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாநில தலைவர் பழனிச்சாமி, மாநில துணை செயலாளர்கள் கோபிநாத், ஏகே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் மாநில பொது செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தமிழக அளவில் 38 சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் தர்ணா, காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

sugar4-25-1477412139

 

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-2016ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டியனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.16 கோடியும், 2016-2017ம் ஆண்டு அரவை பருவத்துக்கு கரும்பு வெட்டியனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.17 கோடி என 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.33 கோடிக்கு கரும்பு பாக்கி பணம் தமிழக அரசு தர வேண்டியுள்ளது. இதையொட்டியே பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் முன்பும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தற்போது தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலை, பெரம்பலூர் நேரு சர்க்கரை ஆலைகளென 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு பாக்கி பணத்தை தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் தருவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

முதலில் தீபாவளிக்கு முன் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் தீபாவளி கழித்து ஒரு வாரத்தில் தருவதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து அலைக்கடிக்கப்படுகின்றனர்.

Leave a Response