15 நாட்களில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் மருத்துவமனை வளாகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

vijaya-bhaskar_2017_6_3

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 245 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 30 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த 30 பேரும் தற்போது நலமாக உள்ளனர்.

அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் காரணமாக கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்ச்சல் குறைந்து வருகிறது. அதை முழுவதுமாக குறைக்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சில் பணிகளை செய்து வருகிறது.

மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர். கடந்த மாதம் 1,113 காலி இடங்கள் நிரப்பப்பட்டது. மேலும் 614 சிறப்பு மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த வாரம் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மத்திய குழுவுடன் நாங்கள் பல்வேறு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தமிழக அரசை பாராட்டி உள்ளனர். அக்குழுவினர் தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவார்கள். அதன்பின்னர் உரிய உதவி கிடைக்கும் என நம்புகிறோம். இன்னும் 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் டெங்கு 100 சதவீதம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் பா.பெஞ்சமின், பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், விஜயகுமார் உடன் இருந்தனர்.

Leave a Response