ஜேஎன்யு மாணவர் மாயமான விவகாரம்; சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

images

 

ஜேஎன்யு மாணவர் நஜீப் மாயமான விவகாரத்தில், மாணவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிஐ போலீசார் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்எஸ்சி பயடெக்னாலஜி படித்து வந்தவர் நஜீப் அகமது (27). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, அவர் தங்கியிருந்த மகி-மந்வி விடுதியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் அமைப்புடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் மாயமானார். அதன்பின் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

 abvp

ஒரு மாதம் கடந்த நிலையில்  நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ், மாயமான மகனை கண்டுபிடித்து தரும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் இவ்வழக்கில் மாணவரை கண்டறிய துரிதம் காட்டினர். ஆனால் அதற்கான எந்த தடயங்களும் சிக்கவில்லை. 

சுமார் 6 மாதமாகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, நீதிமன்றம் அவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதோடு, வழக்கு விசாரணையை டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மேற்பார்வையில் நடத்த உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில் மே 16ம் தேதி உத்தரவுக்கு பின், இவ்வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி மற்றும் சந்தர் சேகர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முன்னதாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலவர அறிக்கையில், இவ்வழக்கில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், நேற்றைய விசாரணையின் போது, சந்தேகப்படும் நபர்களின் செல்போன் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை ஏற்கனவே ஆய்வு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

 

இந்த முரண்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பின்னர் வழங்கிய உத்தரவில்  கூறியதாவது:

சிபிஐ விசாரணை அனைத்தையும் டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் கண்காணிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலவர அறிக்கையை அவர் பார்வையிட நேரமில்லாதது போல் தெரிகிறது. இதனால் தான் இந்த விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. மேலும் இந்த வழக்கினை விரைந்து முடிக்கும் வகையில் மாயமான மாணவனை கண்டறிய சிபிஐ எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் ஆர்வம் இல்லாது அலட்சியப்போக்குடன் இருப்பது தெரிகிறது. டெல்லி போலீசார் தெரிவித்த முன்னேற்றம் கூட சிபிஐ தெரிவிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டிஐஜியை நீதிமன்றத்தில் நேரில் அழைத்து வழக்கு நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

 

* ஜவஹர்லால் நேரு பல்கலை.யின் மாணவர் விடுதி தேர்தல் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி எம்.எஸ்சி முதலாம் ஆண்டு மாணவர் நஜீப் அகமது மாயமானார். 

* காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க பல்கலை. நிர்வாகமும் போலீசாரும் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காததைத் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விசாரணை சூடிபிடித்தது.

* நஜீப்பின் தாய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னரும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

* விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தபின்னரும் வழக்கின் புலன் விசாரணையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாதது நீதிமன்றத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

* பிரபலமான ஒரு பல்கலை.யின் மாணவர் மாயமான விவகாரத்தில் கடந்த ஓர் ஆண்டாக நிலவும் மர்மம் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் பல்கலை. மாணவர்கள் உள்ளனர்.

Leave a Response