ரவுடி ஸ்ரீதர் உடல் இன்று பிரேத பரிசோதனை : இன்றே உடலை அடக்கம் செய்ய முடிவு.

201701051704336672_ED-arrests-Chennai-criminals-brother-in-money-laundering_SECVPF

கம்போடியாவில் கடந்த 4ம் தேதி  மர்மமான முறையில் உயிரிழந்த காஞ்சிபுரம் தாதா  ஸ்ரீதரின் உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கொலை உள்ளிட்ட ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தலைமறைவாக இருந்தார்.

 

அங்கு கடந்த 4ம் தேதி விஷம் குடித்து மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார்.  இதனையடுத்து, கம்போடியாவில் முகாமிட்டு ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வேலைகளில் வழக்கறிஞர் புருஷோத்தமன் மற்றும் ஸ்ரீதர் மகன் சந்தோஷ்குமார் ஆகியோர்   ஈடுபட்டனர். அக்.14ம் தேதி மாலை 6.30 மணிக்கு கம்போடியாவில் இருந்து புறப்பட்ட கார்கோ விமானம் மூலம் ஸ்ரீதர் உடல் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 7.30 மணிக்கு வந்தது.

 

அங்கிருந்து அக்.15ம் தேதி (நேற்று) காலை 7 மணிக்கு புறப்பட்டு  10.45 மணிக்கு சென்னைக்கு  வரவேண்டிய விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக 11.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.  பின்னர் ஸ்ரீதரின் உடல் சென்னை விமான நிலையத்தில் இருந்து 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 போலீசாரின் பாதுகாப்புடன் நேற்று இரவு ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை மற்றும் மரபணு சோதனை ஆகியவை செய்யப்பட்ட பிறகு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

 

பிரேத பரிசோதனைக்கு பிறகு ஸ்ரீதரின் உடல் அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் காரணமாக ஸ்ரீதரின் உடல் இன்று காலை 10 மணிக்கு மேல் செங்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Response