குழந்தைக்கு மாந்தம்! என்ன செய்வது? -சித்த மருத்துவர் அருண் சின்னையா தரும் ஆலோசனை

baby photo

குழந்தைக்கு மாந்தம் என்பது தாய்ப்பாலினால் வரும்.

இந்த மாந்தத்தால் குழந்தைக்கு தொண்டையில் சளி கட்டுவது, சளி அதிகமாவது, மூக்கு அடைத்துக்கொள்வது, மூச்சு விடமுடியாமல் சிரமப்படுவது இப்படியெல்லாம் சில சிக்கல்கள் வரும். குழந்தை மேல் இருக்கும் ஆசை அதிகமாக இருக்கலாம், அதனால்தான் கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக கத்தட்டும் அதன் பிறகு பால் கொடுத்தால் செரித்துவிடும் என்பதற்கு காரணம் என்னவென்றால் அப்பொழுதுதான் ஒழுங்கான பசியாக இருக்கும். இல்லையென்றால் பழக்கத்தின் அடிப்படையில் குடுப்பதால் நிறைய மாந்தம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு.

சிறு வயதிலேயிருந்து நாம் மூலிகைகளைக் கொடுத்து பழக்கும்பொழுது இந்த மாந்தம் என்ற ஒன்று வராத சூழலை குழந்தைக்கு உருவாக்க முடியும். ஆறு மாதம் ஆனபிறகு குழந்தைக்கு துளசிச்சாற்றை பழக்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஒரு ஐந்து சொட்டிலிருந்து பத்து சொட்டு துளசிச்சாற்றை ஒரு குழந்தைக்கு ஆறுமாதம் கழித்து, வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கொடுத்து வரும்பொழுது கைக்குழந்தைகளை மிக எளிமையாக பராமரிக்க முடியும்.

அதேபோல் ஆறுமாதம் கழித்த குழந்தைகளுக்கு தூதுவளைச் சாறு கொடுக்கலாம்.

எட்டு மாதம், ஒன்பது மாதம் வரும்பொழுது அரிசி சாதம் ஊட்டக்கூடிய அளவிற்கு குழந்தை வளர ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி நேரத்தில் குழந்தைக்கு நொய்யரிசியை நன்றாக குழைய வேகவைத்து கூடவே உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து இதை தாராளமாகத் தரலாம்.

சில குழந்தைகளுக்கு இந்த அரிசியும் உருளைக்கிழங்கும் கொடுப்பதால் ஜீரணசக்தி இல்லாமல் அப்பொழுதும் மாந்தம் உண்டாகலாம். அந்த மாதிரி மாந்தம் வருகிற பொழுது தூதுவளைச் யை ரசமாக வைத்துக்கொடுக்கலாம்.

மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், முள் நீக்கிய தூதுவலை இவையனைத்தையும் லேசாக நெய்யில் வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து இதன் கூடவே தக்காளியையும் சேர்த்து ரசமாக வைத்து இந்த ரசத்தை ஒரு தேக்கரண்டியிலிருந்து இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைக்குக் கொடுக்கலாம். இணை உணவோடு தூதுவளை ரசம் கொடுக்கும்பொழுது உணவினால் பெறப்பட்ட அந்த மாந்தத்தை இந்த ரசம் முழுமையாக நீக்கி அந்தக் குழந்தைக்கு சளி இல்லாமல், இருமல் இல்லாமல் மூச்சில் ஏதும் பிரச்சினை இல்லாமல் நன்றாக வளரக்கூடிய சூழலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தூதுவளை கண்டிப்பாகக் கைக்கொடுக்கும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தூதுவளையை உப்பு, மிளகாய், புளி வைத்து துவையலாக அரைத்து அந்தத் துவையலை நாம் கொடுத்து பழக்கும் பொழுது குழந்தைகளுக்கு மாந்தம், சளி இருமல் இல்லாமல் பாதுகாக்கமுடியும்!

Leave a Response