பேமிலி சென்டிமென்ட், அடிதடி அதகளம், ஜல்லிக்கட்டு சரவெடி…‘கருப்பன்’ சினிமா விமர்சனம்

karuppan2

பேமிலி சென்டிமென்ட், அடிதடி அதகளம்… கிராமத்துப் பின்னணியில் பக்காவான பொழுதுபோக்கு மசாலா படம்

பசுபதியின் தங்கை தான்யா. பசுபதியின் மனைவியின் தம்பி பாபி சிம்ஹா. தான்யா மீது பாபி சிம்ஹாவுக்கு காதல்.

அந்த ஊரில் முரட்டு ஆசாமியான விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் பசுபதியின் காளையை அடக்குகிறார். காளையை அடக்கியதற்கு பரிசாக, பசுபதி தன் தங்கையை, விஜய் சேதுபதிக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்.

தான்யாவுக்காக இத்தனை காலம் காதலித்துக் காத்துக்கிடந்த பாபி சிம்ஹாவால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தான்யாவை எப்படியாவது அடைந்தாக வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் விஜய் சேதுபதி – தான்யாவின் வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுக்கிறார், கெடுக்கிறார், கெடுத்துக் கொண்டேயிருக்கிறார்!

இழந்த நிம்மதி விஜய் சேதுபதி – தான்யா ஜோடிக்கு மீண்டும் கிடைத்ததா? நிம்மதியைக் கெடுத்த பாபி சிம்ஹாவுக்கு என்ன தண்டனை? இதற்கான பதில்கள்தான் கருப்பனின் திரைக்கதை!

அடர்ந்த பெரிய மீசையும் ஏற்றிக் கட்டிய வேட்டியுமாய் விஜய் சேதுபதி! இதுவரை யதார்த்த நடிப்பு நாயகனாக இருந்தவர் பிரமாதமான மசாலாப் பட கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

படத்தின் ஒரு பகுதியாய் வந்து போகிற ஜல்லிக்கட்டு போட்டியில் விஜய் சேதுபதி தன் மீசை துடிக்கத் துடிக்க காளையோடு காளையாகி சீறுகிற காட்சி கம்பீரம்!

வெள்ளந்தி முகமும் வெட்கச் சிரிப்புமாய் அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக தான்யா! கணவன் மீது பாசத்தைக் கொட்டுவதாகட்டும் குடித்துவிட்டுக் கூத்தடிப்பவனை கண்டிப்பதாகட்டும் தான்யா ஏற்றுக் கொண்ட கேரக்டரில் ஏறக்குறைய வாழ்ந்தேயிருக்கிறார்!

விஜய் சேதுபதி – தான்யா ஜோடிப் பொருத்தம் சர்வலட்சணம்!

பாபி சிம்ஹா ’பத்த வெச்சிட்டீயே பரட்டை’ டைப் வில்லனாக அட்டகாச அட்டனன்ஸ் போட்டிருக்கிறார்!

பசுபதியிடமிருந்து வழக்கம்போல் நேர்த்தியான பண்பட்ட நடிப்பு!

சிங்கம்புலி மொக்கையாய் காமெடி பண்ணுவார் என்பது தெரிந்த விஷயம். நடிக்கவும் செய்வார் என்பது இந்த படத்திலிருந்து தெரிந்து கொண்ட அம்சம்!

சரத் லோகிதஸ்வாவை இன்னும் எத்தனை படங்களில்தான் இதேபோல் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை?!

ஆர் ஆரில் அதிரடிக்கிறார் இமான். பாடல்களில் இனிமைக்கும் குறைவில்லை!

கிராமத்து பின்னணி, மாமன் மச்சினன் சண்டை என சிம்பிளான வழக்கமான கதைதான். அதை கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் வழங்கிய விதத்தில் கருப்பனை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ‘ரேனுகுண்டா’ பன்னீர் செல்வம்!

Leave a Response