அரசு மருத்துவர்கள் அலட்சியம்- கணவர் கண் முன்னே இறந்த மனைவி!

arasu

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி. இவருடைய மனைவி சாந்தி (40). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சாந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் உடையார் பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சென்றார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இது சாதாரண காய்ச்சல்தான் என்று கூறி மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகவே டெங்கு காய்ச்சலாக இருக்குமோ? என்று பயந்து சாந்தியை அவரது கணவர் அழைத்துக் கொண்டு உடையார்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் மருத்துவமனையில் பணியில் இல்லாததால் மயங்கிய நிலையில் கிடந்தார் சாந்தி. சுகாதார நிலைய வளாகத்தில் தனது கணவரின் மடியில் சாந்தி படுத்து கிடந்தபோது மருத்துவர்கள் வந்ததும் சிகிச்சை கிடைத்துவிடும் என்று ரவி ஆறுதல் கூறியுள்ளார்.

girl

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் அங்கு மருத்துவர்கள் வானொலி, செல்வம், சையத்ஹெரீம் ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் சாந்தியின் உடலை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ரவி, தனது மனைவியின் திடீர் இறப்பைத் தாங்கி கொள்ள முடியாமல் கதறி அழுதார்.

மேலும், மர்ம காய்ச்சலுக்கு மருத்துவர்கள் சரிவர சிகிச்சை அளிக்காததால்தான் தன் மனைவி இறந்துவிட்டார் என்று அவரது கணவர் ரவி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த சாந்தியின் உறவினர்கள் மற்றும் அவரது தெருவில் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்குள்ள மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் அங்கு ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, காவல் ஆய்வாளர் வேலுசாமி உள்பட காவலாளர்கள் மற்றும் தாசில்தார் திருமாறன் உள்ளிட்டோர் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

DYFI Aarpattam

மர்ம காய்ச்சலின் தன்மையை பரிசோதித்து அதற்கேற்றார் போல் சிகிச்சை அளித்து இருந்தால் சாந்தி பிழைத்திருப்பார். மருத்துவர்களின் மெத்தனப்போக்கே சாந்தியின் இறப்புக்கு காரணம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அப்போது உங்கள் புகாரை மனுவாக எழுதிக் கொடுங்கள், முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். அதன்பேரில் புகார் மனு எழுதி அதிகாரியிடம் கொடுத்தனர்.

அதன் பின்னர் காவலாளர்கள் சாந்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இறந்துபோன சாந்திக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

Leave a Response