அரசியல் கருத்துகள் பேசுவதால் விஜய் டிவியுடன் மோதல்?! பிக் பாஸிலிருந்து விலகுகிறாரா கமல்?

big kamal
சமீபமாக கமல் பேசும் விஷயங்கள், போடும் டிவிட்டுகள் எல்லாம் அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. கமலின் பேச்சுக்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு!

அவர் சொல்லும் கருத்துகள் மக்களின் மன உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளதாலேயே இந்த வரவேற்பு சாத்தியமாகிறது. கமல் விஷயத்தைப் பொறுத்தவரை, ‘நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை இவர் சொல்கிறாரே’ என்ற உணர்வு மக்களிடம் இருக்கிறது!

கமல் ஏதோ ஸ்டண்ட்டுக்காகவோ, மலிவான பப்ளிசிடிக்காகவோ கருத்துகளை வெளியிடவில்லை. நிஜமாகவே சமூக அக்கறை கொண்ட மனிதர்தான் அவர். வருமான வரி விஷயத்தில் வெளிப்படையாக தன் கருத்தை கமல் தெரிவிக்கிறார் என்றால் அவர் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறார், அதனாலேயே துணிச்சலாக கருத்து சொல்கிறார்!

ஒரு கருத்து சொல்லும்முன் ‘தான் சரியாக இருக்கிறோமா’ என பார்த்துக் கொள்கிறார். இல்லாவிட்டால் ‘நீ ஒழுக்கமா?’ என சமூகம் தன்னை நோக்கி கை காட்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்!

கடந்த ஞாயிறன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரியலூர் மாணவி மரணச் செய்தியைக் குறிப்பிட்டு ‘இனி இப்படியொரு மரணம் நிகழக்கூடாது. அதற்கு தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டுமோ அதை கல்வியாளர்கள் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினார். ஆலோசனை சொல்கிறேன் என்ற பெயரில் ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கவில்லை. ‘தீர்வு எனக்குத் தெரியாது. ஆனால், இப்படியான அவலம் நடக்கக்கூடாது. கல்வியாளர்கள் தீர்வு காணட்டும். நான் என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்’ என தெளிவாகச் சொன்னார். தனக்கு இது தெரியும் இது தெரியாது என புரிந்து வைத்திருக்கிறார். கமலின் பெரிய பலம் இதெல்லாம்தான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவன சேனலின் நிகழ்ச்சி. கமல் அந்த நிகழ்ச்சியில் இருப்பது சேனலின் ‘டிஆர்பி’க்காகத்தான். ஸ்க்ரிப்ட் என்ன சொல்கிறதோ அதன்படி பேசிவிட்டு வர வேண்டியதுதான் காம்பியரின் வேலை. வாங்குகிற சம்பளத்துக்கு உரிய வேலையைச் செய்து விட்டு வரவேண்டும். அதைவிட்டு விட்டு சொந்தக் கதை, சோகக் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அந்த களத்தில் இடம் கிடையாது. விரும்பினாலும் அந்த வாய்ப்பை சேனல் தராது.

ஆனால், இந்த மரபை கமல் உடைத்திருக்கிறார். நிகழ்ச்சியை படு ஸ்டைலாக அவருக்கே உரிய ஆளுமையோடு நடத்துகிறார். அதே நேரம் சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை, நடப்பு அரசியலுக்கு எதிரான கருத்துகளை துணிச்சலாக நாசுக்காக முன் வைக்கிறார்.

கமலை இந்த நிகழ்ச்சிக்குள் கூட்டி வந்ததே அவர் சினிமா பிரபலம் என்பதால்தான். ஆனால், கமலுக்கு சமீபமாக அரசியல்வாதி போன்ற அடையாளம் உருவாகியிருக்கிறது. அவரும் சமீபத்திய பிக் பாஸ் எபிசோடில் ‘நான் இனியும் முகமூடி போட்டுக்கொள்வதாயில்லை’ என அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில்தான் சேனல் தரப்பு, கமல் தன்னுடைய சொந்த அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த பிக் பாஸ் மேடையைப் பயன்படுத்திக் கொள்வதாக நினைத்திருக்கிறது.
WHEN_13302
பிக் பாஸ் மேடை என்பது வேறு களம். இந்த நிகழ்ச்சிக்கான ஆடியன்ஸ் கமலை நடிகராகத்தான் பார்ப்பார்கள். அரசியல்வாதியாக பார்க்க மாட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியை கமல் என்கிற நடிகர் நடத்துகிறாரா அரசியல்வாதி கமல் நடத்துகிறாரா என்ற சந்தேகம் ஆடியன்ஸுக்கு வரும். கமலின் நோக்கம் நல்லதாக இருக்கட்டும், அவர் பேசும் கருத்துகள் சரியானதாகவே இருக்கட்டும். ஆனால், அது நம் சேனலுக்கு ஒருவித அரசியல் சாயத்தை உருவாக்கிவிடக் கூடாது. ஆளுங்கட்சியின் கோபம் ஏதும் தங்கள் மீது திரும்பிவிடக் கூடாது. அரசியல் வாடை தூக்கலாக இருப்பதால் ஆடியன்ஸ் சேனல் மாறிவிடக்கூடாது என்றெல்லாம் சேனல் தரப்பில் பல்வேறு விதமான ஆலோசனை நடந்ததாம்.

இடையில் இரண்டொரு வாரங்கள் டிஆர்பி இறங்கியதற்கு கமலின் அரசியல் பேச்சும் ஒரு காரணமாக இருக்குமோ என்கிற அளவுக்கு யோசித்தார்களாம். ஆனால், சேனல் தரப்பு பொறுமை காத்தார்களே தவிர, கமலிடம் இது விஷயமாக எதுவும் பேசவில்லை என்கிறார்கள்!

தன்னைப் பற்றி இப்படி பேசப்படுவது குறித்து கமல் காதுக்கும் செய்தி எட்டியதாம். கமல் குழம்ப வில்லை. தான் தெரிவிப்பது சமூக மாற்றத்துக்கு சின்னதாய் துரும்பு கிள்ளிப் போடும் சமாச்சாரம்தான். அதைக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலை வந்தால் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரலாம், தேவையெனில் நிகழ்ச்சியிலிருந்து விலகவும் செய்யலாம் என யோசித்திருக்கிறார்.

அதற்கெல்லாம் அவசியமில்லாதபடி, நினைத்ததை விட பிக் பாஸ் மேடையில் கமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிக்கிற கருத்துகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளதால் ஆடியன்ஸ் அதிகரித்திருப்பதாக தகவல் சொல்கிறார்கள்!
எது உண்மை எது பொய் என்பதைத் தாண்டி ஒன்று மட்டும் உறுதியாய்ச் சொல்ல முடியும்.அது,

கமலின் அரசியல் கருத்துகள் தங்கள் சேனலுக்கு நிகழ்ச்சிக்கு வரவேற்பை அதிகரிக்கும் என்றாலும்கூட கமல் ஓரளவுக்கு மேல் எல்லை தாண்ட சேனலும் அனுமதிக்காது. கமலும் எதிலும் சரியாகவே இருப்பதால் அவரும் எல்லை தாண்ட மாட்டார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை மக்களின் பிரதிநிதி மக்களின் பிரதிநிதி என கமல் அடிக்கடி சொல்லிக் கொள்வார். அது கமலுக்கு ஸ்கிரிப்டில் கொடுக்கப்பட்ட வாசகமாக இருக்கலாம். கமல் அந்த வாசகத்துக்கு உயிர் தந்துகொண்டிருக்கிறார்!

Leave a Response