ஆந்திராவில் டெங்கு காய்ச்சல்: வேலூர் மருத்துவமனைக்கு படையெடுக்கும் நோயாளிகள்

mosquito_0
ஆந்திராவில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால், நோயாளிகள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஆந்திரா மாநிலம், சித்தூர், பலமனேர், திருப்பதி, பரதராமி ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு சென்றால், அவர்களை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்படி, டாக்டர்கள் கூறி அனுப்புகின்றனர்.

இதனால் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள, தனியார் மருத்துவமனைகளில், ஆந்திரா மாநில நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், இதை பயன்படுத்திக் கொண்டு, டெங்கு காய்ச்சல் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் ஒருவருக்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

தற்போது, ஆந்திரா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்துள்ளது. இதை பயன்படுத்தி, வேலூர் தனியார் மருத்துவமனைகளில், சோதனை என்ற பெயரில் பணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. இவ்வாறு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response