மரணத்தை தள்ளிப்போட வயதான உயிரணுக்களை அழிக்க வேண்டுமாம்! அமெரிக்கா கண்டுப்பிடிப்பு!

nhung

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்னும் பழமொழி, நுகர்பொருட்களுக்கு மட்டுமல்லாது மனித உடலின் உயிரணுக்களுக்கும் பொருந்தும் என்கிறது அமெரிக்காவின் மேயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

இச்சோதனை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு விரைவாக வயதாகும்படி மருந்துகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனித உடலின் இயல்பான வளர்ச்சியின்போது உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்றுநோய்கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால் அந்த உயிரணுக்களை நம் உடலானது செயலிழக்கச் செய்துவிடும்.

இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று இறந்து போவது. மற்றொன்று செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கொண்டு காலம் கழிப்பது.

இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்து விட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சனையே. அந்த உயிரணுக்கள் தங்கள் பங்குக்கு தேவையில்லாத, உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ‘தவறான புரதங்களை’ உற்பத்தி செய்கின்றன.

உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் ரசாயன சமிக்ஞைகள் சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விரைவாக வயதாகிவிடும் வகையில் எலிகள் வளர்க்கப்பட்டன. அவற்றுக்கு 10 மாதமாகும்போது கண்புரை நோய், சக்தியிழந்த தசைகள் மற்றும் கொழுப்பு படிவதில் குறைவு போன்ற நோய்கள் இருந்தது மட்டுமில்லாமல் அவை இருதய நோயால் இறந்துவிட்டன.

ஆனால் சில எலிகளுக்கு மட்டும் மூன்றாவது வாரத்தில் வயதான உயிரணுக்கள் உயிரணு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகும் வண்ணம் ஒரு மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும் இதே மருந்து சிகிச்சை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்படாத எலிகளுடன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு உறுதியான தசைகள், குறைந்த எண்ணிக்கையில் கண்புரை நோய் மற்றும் சுருக்கம் குறைந்த தோல் (தோலில் கொழுப்பு படிதல் சரியாக இருப்பதால்) போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் மீண்டும் மருந்துச் சிகிச்சையை தொடர்ந்தபோதும் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்க முடியவில்லை. ஆனால், குறைபாடுகள் மேலும் தொடராத வண்ணம் தடுக்க முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வயதான உயிரணுக்களைத் தற்கொலைக்குத் தூண்டும் மருந்துச் சிகிச்சையால் மூப்படைதலுடன் தொடர்புடைய மாற்றங்கள் நிறுத்தப்படவுமில்லை, ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. ஆனால் ஆரோக்கியமான ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நோய் நொடியில்லாமல் 50 வருடம் வாழ்வதற்கும், நோய் நொடியுடன் 100 ஆண்டு காலம் வாழ்வதற்குமான வித்தியாசம்தான் ஆரோக்கியமான ஆயுட்காலத்துக்கும், ஆரோக்கியமற்ற ஆயுட்காலத்துக்குமான வித்தியாசம்.

வயதான உயிரணுக்களை நீக்குவதால், மனித உடலில் இறப்பை உண்டாக்கும் வயதான உயிரணுக்களின் பாதிப்புக்கு அப்பாற்பட்ட பிற ரசாயன மாற்றங்கள் மற்றும் உடலியல் நிகழ்வுகளை தடுக்க முடியாது என்பதாலேயே இச்சிகிச்சையால் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை மட்டுமே நீட்டிக்க முடியும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

உதாரணமாக, வயதான உயிரணுக்களை தாக்கி அழிக்கும் வண்ணம் மனித உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம்.

Leave a Response