கொட்டாவிக்கு கதவு திறக்கும் திரைக்கதை! ‘ஆக்கம்’ சினிமா விமர்சனம்!

aakkam

வடசென்னையை மையமாக வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன. அவற்றுள் நிறைவான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த விதத்தில் ‘ஆக்கம்’ விரலுக்கு வேலை வைக்கவில்லை!

‘இன்னாடா நீ… அத்த திருடுன இத்த திருடுனனு போலீஸ்ல மாட்டுற. அவ்மானமா இருக்கு. எதுனாச்சும் கொல கிலன்னு பண்ணக்கூடாதா?’ என மகனுக்கு அட்வைஸ் அள்ளிவீசும் அம்மா.

படிப்பைத் தொலைத்துவிட்டு சின்னச் சின்ன திருட்டில் ஆரம்பித்து நாளுக்கு நாலு கொலை செய்யும் அளவுக்கு வளர்கிற மகன். போகிற போக்கில் பெண்களுடன் படுத்தெழுவது அவனுக்கு ஹாபி.

அந்த ஹாபிக்குள் காதல் மோகத்தோடு வந்து விழுந்து ‘அம்மா’வாக பிரமோஷன் ஆகிற இளைஞி!

அயோக்கியர்களுடன் நட்பாக இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தி கலெக்டராகும் ஒரு ‘அடடே’ ஆசாமி!

இப்படிப்பட்ட விதவிதமான மனிதர்களை கேரக்டர்களாக்கி, ‘படிப்பு முக்கியம்’, ‘கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்’ என சிலபல கருத்துகளைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.

கதைநாயகன் சதீஷ் ராவண், கதைநாயகி டெல்னா டேவிஸ் இன்னபிற நடிகர்கள் தேர்வில் குறையில்லை. நடிப்பிலும் தேறிவிடுகிறார்கள்.

‘நேசம் புதுசு’ ரஞ்சித்துக்கு இந்தப் படம் நல்லதொரு ரீ என்ட்ரீ. ரவுடித்தனங்களில் ஊறி பின்னர் திருந்தி வாழும் மனிதனாக அலட்டலில்லாத நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்!

படத்தின் நீளம், சுவாரஸ்யமற்ற திரைக்கதை எரிச்சலோ எரிச்சல். திரும்பத் திரும்ப வருகிற ஒரே மாதிரியான காட்சிகள் கொட்டாவிக்கு கதவு திறந்து விடுகின்றன!

வடசென்னையின் அழுக்குத் தெருக்கள், குப்பை மேடுகள், பாழடைந்த கட்டடங்கள் என சுற்றிச் சுழன்றிருக்கிற ஜிஏ. சிவசுந்தரின் கேமராவுக்கு மட்டும் ஒரு பாராட்டு!

இசை ஸ்ரீகாந்த் தேவாவாம். அங்கங்கு தெரிகிறார்.

இயக்குநர் கருத்து சொல்ல வந்ததெல்லாம் சரிதான்… சொன்ன விதத்தில்தான் ஏகத்துக்கும் சறுக்கல். எதைக் காட்டினால் சமூகம் விழிப்புணர்வு பெறும், எதைக் காட்டினால் சமூகம் சீரழியும் என்ற தெளிவு இயக்குநருக்கு துளியும் இல்லை. இருந்திருந்தால் ‘படத்தை தியேட்டரில் போய் பாருங்கள்’ என்று நாம் நாலு பேருக்கு சொல்லலாம்.

சாரி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

Leave a Response