ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்:

GGSR Review
‘ஆட்டோகிராப்’ கதையை கலகலப்பான காமெடியில் புரட்டிப் பரிமாறியிருக்கும் படம்!

காதல் மன்னன் ஜெமினிகணேசனின் ரசிகரான அப்பா ஒருவர் தன் பிள்ளை அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என பெயர் வைத்து வளர்க்கிறார்.

டீனேஜில், பெயருக்கேற்ப அதர்வா காதல் மன்னனாகிறார்.

ஒரு பெண் கொஞ்சம் பளீரென்றிருந்தால் போதும் உடனே அந்தப்பெண்ணுடன் இவர் காதலாகிறார். இல்லையென்றால் அந்தப் பெண்கள் அதர்வாவை சுத்துப் போட்டு டூயட்’ பாடுகிறார்கள்!

கதைப்படி மச்சக்கார மனுஷன் அதர்வாவுக்கு அந்தப் பெண்களுடன் கலர்ஃபுல்லாக ஆடிப்பாடி பொழுதுபோக்க பிடிக்கிறதே தவிர எந்த பெண்ணுக்கும் மூன்று முடிச்சு போட பிடிப்பதில்லை. காதலித்த பெண்களையெல்லாம் கழட்டிவிட்டு அடுத்தடுத்த பெண்களைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிறார்.

ஓட்டம் எங்கே முடிவுக்கு வந்தது என்பதே கதை!

இயக்கம்: ஓடம் இளவரசு

காதல் மன்னன் என்பதற்கு பொருத்தமாக வாலிப மிடுக்கோடு பன்னுக்கு பட்டர் தடவியதுபோல் பளபளப்பாக வருகிறார் அதர்வா. பார்க்கிற பெண்களையெல்லாம் இவர் கவிழ்ப்பது பெண்கள் தானாக இவரிடம் வந்து கவிழ்வது என்ற ரசனையான, ரகளையான எபிசோடுகளில் கடந்துபோகும் காதலிகள் லிஸ்டில் முக்கியமான நான்கு பேர் ரெஜினா கசண்ட்ரா, பிரணிதா, அதிதி போகன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்த நான்கு பேரும் உச்சிவெயிலுக்கு வெள்ளையடித்த மாதிரி ஜிவ்வென்றிருக்கிறார்கள்! பாடல் காட்சிகளில் வானவில்லாய் ஈர்க்கிறார்கள்!

அதர்வா தன் திருமணப்பத்திரிகையை முன்னாள் காதலிகளுக்கு கொடுக்கப் போகும்போது துணைக்குப் போகிறார் சூரி. அவர்களோடு கிச்சுக்கிச்சு காமெடி ஓடி வருகிறது! (தாடி) ஒட்டிக் கொண்டு வருகிறார் ‘மொட்டை’ ராஜேந்திரன்!

இமான் இசையில் ‘அம்முக்குட்டியே’, ‘வெண்ணிலா தங்கச்சி’ பாடல்கள் ரசுக்கும்படியிருக்கிறதென்றால் ஆர்ட் டைரக்டரின் உழைப்பில் பாடல் காட்சிகள் வண்ணமயமாய் ரங்கோலி கொண்டாடியிருக்கிறது!

உங்களின் இந்த வீக் என்டை சிரித்து ரசித்துக் கழிக்க ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் கேரண்டி! இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாகா டி.சிவா தயாரித்துள்ளார்.

Leave a Response