ரஜினி, ரகுமானை வம்புக்கு இழுக்கிறாரா மதன் கார்க்கி? சந்தேகத்தை எழுப்பும் கவிஞர் முருகன் மந்திரத்தின் கேள்வி…

Madhan Karky + Murugan Manthirm
தற்போது இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படுவது ஜி.எஸ்.டி. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சினிமா துறையினரிடையே ஜி.எஸ்.டி’யை எதிர்த்து குறைகள் அதிகம். காரணம் திரையரங்கு டிக்கட்டுகளில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி தவிர்த்து, தமிழகத்திற்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. மிக அதிகம். மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி இரண்டும் சேர்த்தல் சுமார் 68% வரை வரியாக சென்றுவிடும்.

இந்த சூழலில் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இன்று முதல் தமிழகம் முழுவதும், திரையரங்குகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவித்து, மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்திருப்பதாவது, “தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி மறுபரிசீலனை செய்யும் வரை, தான் எழுதும் பாடல்கள் மற்றும் வசனங்களின் சம்பளத்தில் 15% குறைத்து கொள்கிறேன்” என்று தெரவித்துள்ளார். இது ரஜினி குறைப்பாரா, ரகுமான் குறைப்பாரா என்று மற்றவர்களைப் பற்றி பேச வைக்கவா? என கவிஞர் முருகன் மந்திரம் மதன் கார்க்கிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சமுக வலைத்தளம் வாயிலாக முருகன் மந்திரம் மதன் கார்க்கிக்கு எழுதியிருப்பதாவது கீழே வருமாறு:

நண்பர் மதன் கார்க்கி அவர்களுக்கு,

வணக்கம், ஜிஎஸ்டி மற்றும் தமிழ்நாடு அரசின் வரிவிதிப்பு பிரச்சினையில் திரையரங்குகள் மூடப்பட்டு வேலைநிறுத்தம் நடைபெறுவது குறித்து நீங்கள் கருத்து தெரிவித்துள்ளீர்கள். விரைவில் இயல்பு நிலைக்கு தமிழ் சினிமா திரும்பவேண்டும் என அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஆனால், வேலை நிறுத்தம் முடியும் வரை பாடல் எழுதுவது, அல்லது வசனம் எழுதுவதற்கான உங்கள் சம்பளத்தில் / சன்மானத்தில் 15% சதவீதம் குறைத்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அது தமிழ் சினிமாவிற்கு உதவி செய்யும் எனில் எனவும் தெரிவித்திருக்கிறீர்கள்.

ஜி.எஸ்.டி. மற்றும் தமிழ்நாடு அரசின் வரிவிதிப்பு பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. அதைப்போல நீங்கள் 15% குறைத்துக்கொண்டால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் நன்மை அடைந்துவிடாது என்பதும் உங்களுக்குத் தெரியும். பின் எதற்காக அப்படி தெரிவித்திருக்கிறீர்கள்.

மதன் கார்க்கி குறைத்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார், ரஜினி குறைப்பாரா, ரகுமான் குறைப்பாரா என்று மற்றவர்களைப் பற்றி பேச வைக்கவா?. நடிகர்கள், நடிகைகள் அதிக சம்பளம் வாங்கும் சினிமாத்துறையினர் உங்களைப்பபோல குறைத்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பேச வைக்கவா? பிரச்சினை சம்பளத்தை குறைத்துக்கொள்வது அல்லவே, அதில் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடாதே.

ஒருவேளை நீங்கள், இந்த பிரச்சினை ஓயும் வரை, சுமூகமான முடிவை எட்டும் வரை நான் பாடல்கள் எழுதமாட்டேன், வசனம் எழுதமாட்டேன் என்று சொல்லியிருந்தால், அது இன்னும் வீரியமாக இருந்திருக்குமே.
நீங்கள் குறைத்துக்கொள்கிறேன் என்று சொன்னது நல்ல எண்ணத்தில் இருக்கலாம். ஆனால், ஒரு பிரச்சினையை முழுவதுமாக தீர்ப்பது பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர, அதை வேறு திசையில் திருப்பவோ, சமாளிக்கவோ யோசிக்கக்கூடாது. ஏன் எனில் அது அந்த பிரச்சினையை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை தந்துவிடும்.

வேறு எதுவும் நோக்கத்துடனோ, உள்நோக்கத்துடனோ இதை சொல்லி இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

என் கருத்துப்புரிதல் தவறாக இருந்தால் மன்னிக்கவும். மென்மையானவர், சுறுசுறுப்பானவர், திறமையானவர், நான் நேசிக்கிற, ரசிக்கிற, மதிக்கிற சக கலைஞனாக உங்கள் மீது எப்போதும் எனக்கு பேரன்பு உண்டு..

அன்புடன்,
முருகன் மந்திரம்

Leave a Response