முதல்வர் நாளை ஊட்டி பயணம்…

palanichami
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைகாலத்தில் ஊட்டியின் குளுமையை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி மற்றும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கூடலூரில் வருவாய்த்துறை சார்பில் வாசனை திரவியக்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கோடை விழா அங்கு தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 121-வது மலர் கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ம் தேதி துவங்கி மூன்று நாள் நடக்கிறது.

இந்நிலையில், மலர் கண்காட்சியை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து அவர் ஊட்டி செல்வார் என தெரிகிறது.

Leave a Response