இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம்….

stalin_14162
தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.20 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்திற்கு தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ அன்பரசன், இ.கருணாநிதி, சுந்தர், வரலட்சுமி மதுசூதனன், ஜெ. அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், ரங்கநாதன், ரவிச்சந்திரன், கு.க.செல்வம், அரவிந்த்ரமேஷ், வாகை சந்திரசேகர், எஸ்.ஆர். ராஜா உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இன்றைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 16-ந் தேதி தொடங்கி 24-ந் தேதியுடன் முடித்து வைக்கப்பட்டது. 5 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆர்.கே.நகர் தேர்தல் வந்ததையட்டி மானியக்கோரிக்கை மீதான விவாதம் அப்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டதால் அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த கூட்டத்தொடர் இறுதி செய்து முடித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதை தவிர்ப்பதற்காகவே கூட்டத்தை முடித்து வைத்திருப்பதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. உடனே சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்தும் தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் அவர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்த கட்டமாக கவர்னர் மாளிகைக்கு சென்று சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்தி மனு கொடுக்கலாமா? அல்லது சட்டமன்றம் முன்பு மறியல் போராட்டம் நடத்தலாமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Response