தேர்தல் ஆணையத்துக்கு சசிகலாவின் பதில்…

sasiklaa
அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், ”கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடைபெற்றுள்ளன. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதலும் பெறப்பட்டது.

புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். எனவே அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை” என்று சசிகலா பதில் அளித்துள்ளார்.தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட பதில் கடிதத்தில் சசிகலாவின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் தான் அவரை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதினார்.

கடந்த 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த 16-ம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அனுப்பினார். அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று அறிவித்தது.நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் அனுப்பியுள்ளார்.

70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலாவின் வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.

Leave a Response