சென்னையில் 870 பேருக்கு பட்டாசு கடைக்கு அனுமதி


crackers_p_221013தீபாவளியையொட்டி, சென்னையில் பட்டாசு கடை வைப்பதற்கு 870 பேருக்கு அனுமதி அளித்து தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. தீபாவளிக்காக தாற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு தாற்காலிகமாக திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், தாற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்குரிய விதிமுறைகளை தீயணைப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.

தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய்த்துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அறிக்கை அனுப்பப்பட்டது.

தாற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தாண்டு தீயணைப்புத்துறைக்கு தாற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு 1,006 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 870 பேருக்கு உரிமம் பெறுவதற்குரிய தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 130 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன மற்றும் 6 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


 

Leave a Response