“மீரா ஜாக்கிரதை” திரைப்படத்தில் நடிக்கவில்லை என பாபி சிம்ஹா பொய் சொல்கிறார்! இணை இயக்குனர் மகேஷ் ஆவேச பேட்டி – காணொளி:

Meera Jakkiradhai Co-Director Mahesh
பாபி சிம்ஹா, மோனிக்கா, லொள்ளு சபா சுவாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் புதிய படம் “மீரா ஜாக்கிரதை”. இந்த திரைப்படத்தை எழுவது வயதடைந்த ஒரு முன்னாள் ராணுவவீரர் R.G.கேசவன் இயக்க அவருடைய மகன் மகேஷ் கதை, திரைகதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தினை M.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது தணிக்கை முடிந்து மே 27, 2016 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் விளம்பரங்கள் சில நாட்களாக நாளேடுகளில் வந்துகொண்டிருக்கும் சூழலில், அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி சிம்ஹா தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் தனக்கு அந்த படக்குழுவில் யாரையும் தெரியாது என்றும், அவருடைய முந்தைய படமான “உறுமீன்” படத்தின் புகைப்படங்கள் போலித்தனமாக விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் மீது குற்றம்சாட்டி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் பாபி சிம்ஹா.

இந்த புகார் சம்பந்தமாக “மீரா ஜாக்கிரதை” திரைப்படத்தின் இணை இயக்குனரும், இயக்குனர் கேசவனின் மகனுமான மகேஷை சந்தித்து பேசினோம். பாபி சிம்ஹா “மீரா ஜாக்கிரதை” படத்தில் நடித்தது உண்மை. படத்தின் இரண்டாவது ரீல் முதல் க்ளைமாக்ஸ் உள்ள ஆறாவது ரீல் வரை அவர் கட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமின்றி அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று ஒரு பொய் புகார் கூறியுள்ளார் என ஆவேசப்பட்டார். பாபி சிம்ஹாவின் பொய் புகாரினால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு அவர் பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா என கேள்வி எழுப்பினார் மகேஷ். இப்படத்தில் அவர் சிவநேசன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். அவர் அப்போது நடிக்கும் போது அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். “பாபநாசம்” படத்தில் வரும் ஒரு காட்சியை போல் அவர் தான் அதில் நடிக்கவில்லை என்று ஒரே பொய்யை பலமுறை சொல்லி உண்மையாக்க நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினார் மகேஷ்.

இறுதியாக அவர் கூறுகையில், இப்படத்தில் தான் அவருடைய வாழ்கையும், படக்குழுவில் உள்ள மற்றவர்கள் வாழ்கையும் அடங்கியுள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்காக அவர்கள் பலரிடம் கடனாக பணம் பெற்றுள்ளதாகவும், படம் வெளியாகவில்லை என்றால் அவர்கள் வாழ்கை நாசமாகிவிடும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இப்படம் வெளி வராமல் தடை ஏற்ப்பட்டால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என ஆவேசத்துடன் தெரிவித்தார் இணை இயக்குனர் மகேஷ்.

சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது” என்னும் திரைப்படத்திலும் இதே போல் வேறு ஒரு பிரச்சனை செய்து அப்படத்தில் அதிக சம்பளம் கேட்டு டப்பிங் பேசாமல் தவிர்த்தார் பாபி சிம்ஹா. பின்னர் அப்படத்தில் வேறு ஒருவரால் அவருடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசப்பட்டு அப்படம் வெளியானது.

Leave a Response