கத்தி திரைப்படத்திற்கு தி.மு.க. MLA ஜெ.அன்பழகன் முழு ஆதரவு:

இளையதளபதி விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளி விடுமுறையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “கத்தி”. இந்த திரைப்படத்தை இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களான ‘அயங்கரன்’ கருணாமூர்த்தி மற்றும் ‘லைகா மொபைல்’ சுபாஸ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரிக்கின்றனர்.

சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜபக்சாவிற்கு மிக நெருக்கமானவர் என்று பல தமிழ் அமைப்புகள் சில மாதங்களாக குரல் எழுப்பி படத்தை தடை செய்ய வலியுறுத்தினர். பின்னர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனக்கோ அல்லது தனது ‘லைகா’ நிறுவனத்திற்கோ ராஜபக்சாவுடன் எந்த ஒரு தொடர்போ இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு “கத்தி” திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தணிக்கைக்கு பிறகு மீண்டும் சில தமிழ் அமைப்புகள் நீதித்துறையை நாடி திரைப்படத்தை தடை விதிக்க ஆணையிடும்படி மனு செய்தார்கள். அதை விசாரித்த நீதிபதிகள் தணிக்கை செய்யப்பட்ட எந்த ஒரு திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை நிராகரித்துவிட்டனர்.
J Anbazhagan Supports Kathi - Twitter copy
இந்த சூழலில் தி.மு.க கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தியில் “கத்தி” திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை அறிந்த தி.மு.க MLA’வும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஜெ.அன்பழகன் தனது ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தில் “கத்தி” திரைப்படத்திற்கு தனது முழு ஆதரவையும் தருவதாக தெரிவித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “கத்தி” திரைப்படம் சொல்லப்பட்ட தேதியில் உலகம் முழுக்க வெளியிடப்பட்டு வெற்றிப்பெறவேண்டும். “ஐ சப்போர்ட் கத்தி”, தான் கத்தி படத்திற்கு மட்டும் ஆதரவு இல்லை என்றும் தான் அனைத்து திரைப்படங்களுக்கும் ஆதரவு தருவதாக குறிப்பிட்டுள்ளார் . ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பது மக்களுக்கு தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். திரைப்படம் என்பது மக்களை மகிழ்விக்கும் ஒரு பொழுதுப்போக்கு அம்சமாக கருதப்படவேண்டும். “கத்தி” திரைப்படம் சம்மந்தமாக திருமாவளவனை பற்றியோ அல்லது வேறு எவரை பற்றியோ கருத்து தெரிவிக்க தான் விரும்பவில்லை என்றும் தனது ‘ட்விட்டர்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
J Anbazhagan & Karunanidhi

anbalagan-mla (1)