ஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்

கால்டாக்ஸி ட்ரைவரான கருணாகரனுக்கு கடன்காரர்களால் பிரச்சனை.. காதல் மனைவி விஜயலட்சுமி கோபித்துக்கொண்டு போகிறார். ஒருநாள் கிரிக்கெட் சூதாட்ட பிக்கியன பாலாஜிக்கு கார் ஓட்டும்போது அவருடன் நட்பு ஏற்பட, அவர் கருணாகரனின் கடன்களை அடிப்பதாக சொல்லிவிட்டு அடுத்த காட்சியிலேயே கத்தியால் குத்தப்பட்டு சாகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரான பாபி சிம்ஹா குற்றவாளி என கருணாகரனை பிடிக்க, கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டிய ஆடுகளம் நரேன், பாலாஜி மூலம் சூதாட்ட ரகசியங்கள் கருணாகரனுக்கு தெரிந்திருக்கலாம் என அவரை கடத்துகிறார். ஒருபக்கம் சூதாட்டத்தை தடுக்க சிம்ஹா முயற்சி செய்ய, இன்னொருபக்கம் வெற்றிகரமாக நடக்கும் சூதாட்டம் யாருக்கு என்ன தந்தது என்பது அதிரடியான ட்விஸ்ட் கலந்த க்ளைமாக்ஸ்..!

சிம்ஹா-கருணாகரன் கூட்டணியை வைத்து கலகலப்பான காமெடி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர் பத்ரி.. நடிகர்களின் கதாபாத்திர தேர்வை கச்சிதமாக செய்திருப்பதால் வெற்றிக்கான அறிகுறி அதிலேயே தெரிந்து விடுகிறது.

சூதாட்ட புக்கிங் என்கிற புது ஏரியா தான்.. அதில் போலீஸான சிம்ஹா வழக்கை டீல் செய்யும் விதம், கருணா எஸ்கேப் ஆக எடுக்கும் முயற்சி, ஆடுகளம் நரேனின் அட்ராசிட்டி காமெடி, விஜயலட்சுமியின் பாத்ரூம் செண்டிமெண்ட், பாலாஜியின் சூதாட்ட புக்கிங் என ஒவ்வொரு ஏரியாவிலும் உங்களை போரடிக்காதவாறு சிரிக்கவைத்தபடியே நம்மை அழைத்து செல்கிறார் பத்ரி..