அமீர் பேச்சால் காயம்பட்ட ‘திலகர்’ இயக்குனர்..!

கடந்த செப்-2ஆம் தேதி ‘திலகர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர், பேசிய வார்த்தைகள் அந்தப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளையை காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அமீர் பேசியது என்னவென்று முதலில் பார்ப்போம்.. “இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ந்துவிட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.

தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும். தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது. எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்”- இதுதான் அமீர் அன்று பேசியது..

இனி திலகர் இயக்குனர் பெருமாள் பிள்ளையின் மனக்குமுறலை பார்ப்போம்.. “விழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் திரு முத்துராமன் அவர்களைப் பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது, யார் யார் அதில் நடித்திருக்கிறார்கள்? கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகில் அழைத்து கதை எதைப்பற்றியது? ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன்.

திலகர் படத்தின் கதையையோஅல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன், சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப்போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால்.

அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்’ திரைப்படத்தின் கதை. எதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல.

மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே. ’ராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ’ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா திரு அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார்? இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக்கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. .

தனக்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை திரு அமீர் அவர்கள் சொல்ல வேண்டும்.