“அம்மா இல்லடா… பேய்” ; சர்ச்சையை கிளப்பும் ‘மூச்’ வசனம்..!

இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினுபாரதி இயக்கியுள்ள படம் தான் ‘மூச்’. இந்தப்படத்தில் நாயகனாக மலையாள நடிகர் நிதின் நடிக்கிறார். நாயகியாக மிஷா கோஷல் நடிக்கிறார்.

இவர்களுடன் அபி-தியா என்ற இரு குழந்தைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் மனோதத்துவ டாக்டராக பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் நடிக்கிறார். இப்படத்திற்கு நிதின் கார்த்திக் என்பவர் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இது பேய்ப்படம் என்று சொன்னாலும் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்குமாம். அதாவது இரு குழந்தைகளை மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும்-பேய்க்கும் இடையே நிகழும் திகில் கலந்த பாசப்போராட்டமே ‘மூச்’. இதன் ட்ரெய்லரில் “நீங்க இத்தன நாளா நம்பிக்கிட்டு இருக்குறது அம்மா இல்லடா.. பேய்” என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இயக்குனரிடம் ஒரு நிருபர், “இது தேவையில்லாத சர்ச்சையை கிளப்பும் வார்த்தையாக இருக்கிறதே.. தயவுசெய்து இதை மாற்றி விடுங்கள்” என்றார்.. அதற்கு பதிலளித்த இயக்குனர் “காட்சிக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்தோமே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.