தந்தை பெயரை ஒரு நொடி மறந்த கமல்…!

நடிகர் ஜெயராம் தன் மகனை தமிழ்சினிமாவில் கதாநாயகனாக களம் இறக்குகிறார்.. அவர் மலையாளத்தில் முன்னணி நடிகர் தான்… ஆனாலும் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என தனது தமிழ்ப்பற்றை காட்டியுள்ளார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமாகிறார் காளிதாஸ்.. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் தான் காளிதாஸ்.

இன்று இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. காளிதாஸை அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும் என்பதற்காகவே தூத்துக்குடி அருகில் நடைபெற்று வரும் ‘பாபநாசம்’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுவந்திருந்தார் கமல்..

விழா நிகழ்ச்சிகளை தயாரிப்பாளரும், நகைச்சுவை நடிகரும், கமலின் முன்னாள் பி.ஆர்.ஓவுமான சித்ரா லட்சுமணன் தொகுத்து வழங்கினார். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் பேசிவிட்டு அமர்ந்ததும் அடுத்ததாக கமலை பேச அழைக்கும் விதமாக, “ஜெயராம் மகனை சீனிவாசன் வாழ்த்திப் பேசினார். அடுத்ததாக சீனிவாசன் மகன் வாழ்த்திப் பேசுவார்” என்று சொன்னார்.

அவர் சொன்னது கமலைத்தான்.. காரணம் கமலின் தந்தை பெயரும் சீனிவாசன் தான். ஆனால் கமலோ தயாரிப்பாளர் சீனிவாசன் பேசியதால் அடுத்ததாக அவரது மகன் பேசுவார் போலிருக்கிறது என சில நொடிகள் சலனம் இல்லாமல் அமர்ந்திருந்தவர் அப்படி யாரும் வராது போகவே, தன்னைத்தான் அழைத்தார்கள் என்பதை அறிந்து சுதாரித்துக்கொண்டு எழுந்து வந்தார்.

அந்த ஒரு நொடி செயலுக்காக தன்னையே நொந்துகொண்ட கமல், காளிதாஸை வாழ்த்திப் பேசும்போது அதை நகைச்சுவையாக குறிப்பிட்டார்.. “நாம் வளர்ந்ததும் ஒரு கட்டத்தில் தகப்பன் பெயரைக்கூட சட்டென ஞாபகத்தில் கொண்டுவரமுடியாதபடி மறந்துவிடுகிறோம்.. ஆனால் காளிதாஸ்.. நீ உன் தந்தையின் பெயரை ஒருபோதும் மறந்துவிடாதே” என ஜாலியாக் குறிப்பிட்டார்.