ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன் – “ராமானுஜன்” விமர்சனம்:

கணக்குப்பாடம் என்றாலே என்று பலருக்கும் வேப்பங்காயாக கசக்கும் நிலையில் கணிதமே உலகம் என வாழ்ந்து, நாளைய கணிதத்தை நேற்றே கண்ட கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறுதான் ‘ராமானுஜன்’ என மூன்று மணி நேரப்படமாக வெளியாகியிருக்கிறது.

சிறு வயதிலேயே ராமானுஜனுக்கு ஏற்பட்ட கணித ஆர்வம், மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே பி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்த அவரது திறமை, மற்ற பாடங்களில் சராசரி மதிப்பெண்கூட வாங்க இயலாமல் அனைவரின் கேலிக்கும் ஆளானது, பின்னாளில் அவரது கணித திறமையே அவரை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் அமரவைப்பது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன்.

ஞானராஜசேகரனிடம் உள்ள சிறப்பே வரலாற்று கதாபத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். பாரதி, பெரியார் வரிசையில் இந்த ராமானுஜனாக ஜெமினிகணேசனின் பேரன் அபினய்யை தேர்ந்தெடுத்திருப்பது அதை உறுதி செய்கிறது. அபினய்யும் இயக்குனரின் கணிப்பை பொய்யாக்கவில்லை. படத்தில் ராமானுஜன் தான் தெரிகிறார். படத்தில் நடித்த மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே நிறைவான நடிப்பையே தந்திருக்கின்றனர்.

ரமேஷ் விநாயகத்தின் இசை, சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவு, பி.லெனின் படத்தொகுப்பு அனைத்தும் சேர்ந்து ராமானுஜனை ஒரு அருமையான ஆவணப்படமாக்கி இருக்கின்றன. அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய ஒரு படமாக, இதை துளி கூட போரடிக்காமல் இயக்கியுள்ள ஞானராஜசேகரனின் முயற்சிகள் இன்னும் தொடரட்டும் என அவரை வாழ்த்துவோம்.